வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி
கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும்
மூலதனம் என்பது, புதிய மூலப் பொருள்கள், புதிய உழைப்புக் கருவிகள், புதிய பிழைப்பாதாரப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் மூலப் பொருள்களையும், உழைப்புக் கருவிகளையும், அனைத்துவகை பிழைப்பாதாரப் பொருள்களையும் உள்ளடக்கியதாகும். மூலதனத்தின் இந்த உள்ளடக்கக் கூறுகள் அனைத்தும் உழைப்பால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். அவை உழைப்பின் உற்பத்திப் பொருள்களாகும்; திரட்டி வைக்கப்பட்ட உழைப்பாகும். [அதாவது] புதிய உற்பத்திக்கு ஒரு சாதனமாகப் பயன்படுகின்ற திரட்டி வைக்கப்பட்ட உழைப்பே மூலதனம் ஆகும்.
பொருளாதார அறிஞர்கள் இவ்வாறே கூறுகின்றனர்.
நீக்ரோ அடிமை என்பது யார்? கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதர். ஒரு விளக்கம் இன்னொன்றைவிடச் சிறந்ததுதான்.
ஒரு நீக்ரோ என்பவர் ஒரு நீக்ரோதான். குறிப்பிட்ட சில உறவுகளில் மட்டுமே அவர் ஓர் அடிமை ஆகிறார். ஒரு பருத்தி-நூற்பு எந்திரம் பருத்தியை நூற்பதற்கான ஓர் எந்திரம் ஆகும். குறிப்பிட்ட சில உறவுகளில் மட்டுமே அது மூலதனம் ஆகிறது. இந்த உறவுகளிலிருந்து துண்டிக்கப்பட்டால் அது மூலதனமாக இருப்பதில்லை – எப்படித் தங்கமே பணமாவதில்லையோ அல்லது எப்படிச் சர்க்கரையே சர்க்கரையின் விலையாவதில்லையோ அதுபோல.
உற்பத்தியின் நிகழ்வுப்போக்கில், மனிதர்கள் இயற்கையின்மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்றுசேர்ந்து உழைப்பதன்மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன்மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வரையறுத்த தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்குச் செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.
உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும், எந்த நிலைமைகளின்கீழ் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். புதிய போர்க்களக் கருவியான துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படையின் ஒட்டுமொத்த அக ஒழுங்கமைப்பும் தவிர்க்கவியலாமல் மாற்றப்பட்டது. தனியாட்கள் ஒரு படையாக அமைந்து, படையாகச் செயல்படுவதற்குரிய உறவுகள் மாற்றம் பெற்றன. வெவ்வேறு படைகள் பிறவற்றோடு கொண்டிருந்த உறவும் மாற்றப்பட்டது.
இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி செய்வதற்குரிய சமூக உறவுகளும், உற்பத்தியின் சமூக உறவுகளும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்பதை நாம் காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்த முழுமையில் சமூக உறவுகளாய் அமைகின்றன. அவையே சமுதாயமாக, இன்னும் குறிப்பாக, வரலாற்று வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்திலுள்ள சமுதாயமாக, தனக்கே உரித்தான தனித்த பண்பியல்பு கொண்ட ஒரு சமுதாயமாக அமைகின்றன. பண்டைய சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், பூர்ஷ்வா (அல்லது முதலாளித்துவ) சமுதாயம் ஆகியவை உற்பத்தி உறவுகளின் இத்தகைய ஒட்டுமொத்தங்களே ஆகும். இவை ஒவ்வொன்றும் மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தைக் குறிக்கின்றன. பண்டைய சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், பூர்ஷ்வா (அல்லது முதலாளித்துவ) சமுதாயம் ஆகியவை உற்பத்தி உறவுகளின் இத்தகைய ஒட்டுமொத்தங்களே ஆகும். இவை ஒவ்வொன்றும் மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தைக் குறிக்கின்றன.
மூலதனமும் உற்பத்தியின் ஒரு சமூக உறவுதான். இது ஒரு முதலாளித்துவ உற்பத்தி உறவாகும். அதாவது, முதலாளித்துவ சமுதாயத்துக்குரிய உற்பத்தி உறவாகும். மூலதனத்தில் அடங்கியுள்ள பிழைப்பாதாரப் பொருள்கள், உழைப்புக் கருவிகள், மூலப் பொருள்கள் ஆகியவை குறிப்பிட்ட சமூக நிலைமைகளின்கீழ், வரையறுக்கப்பட்ட சமூக உறவுகளுக்குள் உற்பத்தி செய்யப்பட்டுத் திரட்டி வைக்கப்படுகின்றன, அல்லவா? குறிப்பிட்ட சமூக நிலைமைகளின்கீழ், வரையறுக்கப்பட்ட சமூக உறவுகளுக்குள் அவை புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, அல்லவா? இந்த வரையறுக்கப்பட்ட சமூகப் பண்பியல்புதானே புதிய உற்பத்திக்குப் பயன்படும் பொருள்களை மூலதனம் என முத்திரை குத்துகிறது, அல்லவா?
மூலதனம் பிழைப்பாதாரப் பொருள்களாலும், உழைப்புக் கருவிகளாலும், மூலப் பொருள்களாலும் மட்டும் ஆனதல்ல. மூலதனம் உற்பத்திப் பொருள் வடிவில் மட்டும் நிலவவில்லை. அதே அளவுக்குப் பரிவர்த்தனை மதிப்புகளாலும் ஆனதாகும். மூலதனம் உள்ளடக்கியுள்ள அனைத்துப் பொருள்களும் பரிவர்த்தனைப் பண்டங்களாகும். எனவே, மூலதனம் என்பது உற்பத்திப் பொருள்களின் தொகுப்பு மட்டுமல்ல, அது பண்டங்களின், பரிவர்த்தனை மதிப்புகளின், சமூகப் பரிமாணங்களின் தொகுப்பும் ஆகும். [மூலதனத்தின் உள்ளடக்கமாக] கம்பளிக்குப் பதில் பருத்தியையும், கோதுமைக்குப் பதில் அரிசியையும், அல்லது ரயில் பாதைகளுக்குப் பதில் நீராவிக் கப்பல்களையும் வைப்பதாலும், மூலதனத்தின் உள்ளடக்கமான இந்தப் பருத்தியும் அரிசியும் நீராவிக் கப்பல்களும், முன்பு அதன் உள்ளடக்கமாயிருந்த கம்பளியும் கோதுமையும் ரயில் பாதைகளும் கொண்டிருந்த அதே பரிவர்த்தனை மதிப்பும் அதே விலையும் கொண்டதாக இருக்கும்வரை, மூலதனம் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. மூலதனத்தின் பருப்பொருள் வடிவம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் வேளையிலும், மூலதனம் சற்றும் மாற்றத்துக்கு உள்ளாவதில்லை.
ஆனால், அனைத்துவகை மூலதனமும் பண்டங்களின் தொகுப்புதான் என்றாலும், அதாவது பரிவர்த்தனை மதிப்புகளின் தொகைதான் என்றாலும், இதிலிருந்து அனைத்துவகைப் பண்டங்களின் தொகுப்பும், அனைத்துவகைப் பரிவர்த்தனை மதிப்புகளின் தொகையும் மூலதனம் என்று பொருளாகாது.
அனைத்துவகைப் பரிவர்த்தனை மதிப்புகளின் கூட்டுத்தொகையும் ஒரு பரிவர்த்தனை மதிப்புதான். ஒவ்வொரு பரிவர்த்தனை மதிப்பும் பல பரிவர்த்தனை மதிப்புகளின் கூட்டுத்தொகைதான். எடுத்துக்காட்டாக, 1,000 பவுண்டு பெறுமானமுள்ள ஒரு வீடு 1,000 பவுண்டு பரிவர்த்தனை மதிப்புடையதாகும். ஒரு பென்னி பெறுமானமுள்ள ஒரு காகிதத் துண்டு, 1/100 பென்னி மதிப்புள்ள 100 பரிவர்த்தனை மதிப்புகளின் கூட்டுத்தொகை ஆகும். பிற பொருள்களுடன் பரிவர்த்தனை செய்யத்தக்க பொருள்களே பண்டங்கள் ஆகும். [பிற பண்டங்களுடன்] பரிவர்த்தனை செய்யப்படுகின்ற வரையறுக்கப்பட்ட விகிதம்தான் அவற்றின் பரிவர்த்தனை மதிப்பு ஆகும். அல்லது இதையே பணத்தில் சொன்னால் அது அவற்றின் விலை ஆகும். இந்தப் பொருள்களின் அளவு [அல்லது எண்ணிக்கை], இவை பண்டங்கள், இவை ஒரு பரிவர்த்தனை மதிப்பைக் குறிக்கின்றன, குறிப்பிட்ட ஒரு விலையைக் கொண்டுள்ளன என்கிற இவற்றின் பண்பியல்புகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. ஒரு மரம் பெரிதாக இருப்பினும் சிறிதாக இருப்பினும் அது மரமாகவே இருக்கிறது. இரும்பை நாம் பிற பொருள்களுடன் அவுன்சுகளில் பரிவர்த்தனை செய்தாலும் அல்லது பவுண்டுகளில் பரிவர்த்தனை செய்தாலும், அந்தப் பரிவர்த்தனையானது, இரும்பு ஒரு பண்டமாகவும், ஒரு பரிவர்த்தனை மதிப்பாகவும் இருக்கும் அதன் பண்பியல்பை மாற்றிவிடுகிறதா? அளவுக்கு ஏற்ப அது அதிக மதிப்புடைய அல்லது குறைந்த மதிப்புடைய பண்டமாக, அதிக விலையுடைய அல்லது குறைந்த விலையுடைய பண்டமாக இருக்கிறது [அவ்வளவுதான்]. அவ்வாறெனில், பண்டங்களின் தொகுப்பு, பரிவர்த்தனை மதிப்புகளின் கூட்டுத்தொகை எவ்வாறு மூலதனமாக ஆகிறது?
அத்துடன், நேரடியான, தற்போதுள்ள உழைப்புச் சக்தியுடன் பரிவர்த்தனை செய்து கொள்வதன்மூலம், மூலதனம் தன்னை ஒரு சுயேச்சையான சமூக சக்தியாக, அதாவது சமுதாயத்தின் ஒரு பகுதியினுடைய சக்தியாகத் தன்னை அழியாது பாதுகாத்துக்கொள்கிறது. மேலும், தன்னைப் பன்மடங்கு பெருக்கிக்கொள்கிறது.
உழைப்பதற்கான ஆற்றலைத் தவிர வேறு உடைமை ஏதுமில்லாத ஒரு வர்க்கம் இருக்க வேண்டியது மூலதனத்துக்கு இன்றியமையாத ஒரு முன்தேவையாகும்.
கடந்த காலத்திய, திரட்டி வைக்கப்பட்ட, பொருளுருப் பெற்ற உழைப்பு, தற்போதைய உழைப்பின்மீது செலுத்தும் ஆதிக்கமே, திரட்டி வைக்கப்பட்ட உழைப்பை மூலதனத்தின் பண்பு கொண்டதாக உருமாற்றுகிறது.
புதிய உற்பத்திக்கான ஒரு சாதனமாகத் திரட்டி வைக்கப்பட்ட உழைப்பு, தற்போதைய உழைப்புக்குத் துணைபுரிகிறது என்கிற உண்மையில் மூலதனம் அடங்கியிருக்கவில்லை. தற்போதைய உழைப்பு, திரட்டி வைக்கப்பட்ட உழைப்புக்கு, அதன் பரிவர்த்தனை மதிப்பை அழியாது பாதுகாத்துப் பன்மடங்கு பெருக்கிக்கொள்ளும் சாதனமாகத் துணைபுரிகிறது என்கிற உண்மையில்தான் மூலதனம் அடங்கியுள்ளது.
அடுத்த பகுதி: கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்குமுள்ள உறவு
முந்தைய பகுதி: கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?